Wednesday, December 31, 2014

விழிகளின் விரதம் ...!!!



ஆழ்ந்த இரவினில்  
அந்நிய தேசத்தில் - என்  
விழிகளின் விரதம் ... !!! 

இமைகளின் ஏக்கமா ??? 
இதயத்தின் இடம் மாற்றமா ??? 
உயிரின் உரையாடலா ??? 
உணர்வின் உரு மாற்றமா ???  

இனியொரு பொழுதில் ... 
இனியவளோடு ... 
சத்தம் இல்லா நிலவொளியில் ...
நித்தம் அவளோடு ...
இயன்றவரை கதை பேசி ... 

அகம் நாடும் அவள் மடியில் ... 
பாதி முகம் புதைத்து ...
மீதி முகம் அவள் விரல்கள் தேடி ...  
விளையாடி விடை பெறட்டும் ..,
இந்த விழிகளின் விரதம்!!!!
விண் மீன்களின் வெட்கத்தோடு!!!!

Friday, November 14, 2014

குழந்தைகள் தின நல் வாழ்த்துக்கள் !!!



பாரதி சொல்லிய ...
வாழ்வின் சூத்திரமான  .. 
இந்த நடை முறைகளை ...
நாமும் நினைவு கூர்ந்து ...
நம் மழலைகளும் 
கடைப்பிடிக்க ...
முயல்வோம் முடிந்த வரை  ..
இந்த நாள் முதல் !!!

ஓடி விளையாடு பாப்பா...
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா....!!!
கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா...!!!

பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்லலாகாது பாப்பா...!!!
தெய்வம் நமக்குத் துணை பாப்பா - ஒரு
தீங்கு வர மாட்டாது பாப்பா...!!!

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு...!!!
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா...!!!

கணிணியும் தொலைக்காட்சியும் ...
Cell-போணும் Tab-ம்மாய் ...
கூண்டுக்குள் அடைபட்ட 
கிளிகளாய் மாறிப்போன ...
குற்றம் கொடியது தான் ...!!!

வியர்வையே அறியாத ..
விட்டுகொடுப்பதை உணராத ...
வினோத மாயை உலகத்தில் 
உலாவும் நம் பிஞ்சுகளை .. 
வெம்பாமல் விளைய வைக்கவேண்டியது ...
நம் கைகளில் தானே !!!

உணர்ந்து உருவாக்குவோம் ...
சகலமும் அறிந்த ..
சகிப்புணர்வும் தெரிந்த ...
சரித்திர நாயகர்களை !!!

அன்பு வாழ்த்துக்களோடு ...
உங்களில் ஒருவன் ..
முரசொலி க 

Tuesday, November 4, 2014

உதடோரம் ஒற்றை நரை ...!!!


முதல் மீசை ... அவ்வளவு ஆசை !!!
பரவச மனது... பதினாறு வயசு !!!
ஆணாகி மிரட்ட ... அவசர மனு !!!
மங்கை மயக்க... தங்கை வியக்க !!!

களவாடிய அப்பாவின் பிளேடுகள் ..
கதறிய கண்ணாடியின் நாட்கள் ..
உதறிய ஓராயிரம் கோபங்கள் ..
பூத்த பலநூறு பருக்கள் .. 
பாத்த சிலநூறு பாவைகள் ...
வயது கோளாறு .. வாலிப வரலாறு !!!

கல்லூரி முடிய .. உள்ளூர பயம் ...
உள்ளூரில் இருக்காதே .. உருப்பட மாட்ட ...
புறப்பட்ட கால்கள் ... நிக்காமல் ஓடியது ...
ஒவ்வொரு தெருவும் .. நேர்முக தேர்வாம் !!!
சென்னையோடு ஒரு செல்பி புள்ள !!!

ஒருவேளை சாப்பாடு .. இருவேளை இடைவேளை .. 
மெல்ல மெல்ல எதோ ஒரு வேலை .. 
எல்லாம் சரியாக ... ஆறு வருடம் மினிமம் ஆச்சு ..
பாதி வாழ்க்கை ..கவலையில் போச்சு ..
மீதி வாழ்க்கை .. கனவிலே போச்சு ..!!!

வாய் தொடும் கிர்தா  .. குறுகுறுக்கும் குறுந்தாடி  ...
மேல் மீசை மிணுக்க ... கால்கட்டு போட ...
மாதவனாய் சில நாட்கள் .. மனைவிக்காக ..
சங்கட பட்ட சமயங்களில் ..சசிக்குமாராக ...
மறுபடியும் மீசை எடுக்காதே .. அங்கே அம்மா ...!!!
சேவ் பண்ணுனா என்னடா .... அப்பா அவ்வபோது !!!

பாட்டி இறந்தாலும் ... பங்காளி முறையில் ...
பதினோரு பேரு ... மேவாசை அது  குலவழக்கு ...
தாய்க்கு பத்து என பெத்துபோட்ட நம்மில் ....
பாடை தூக்க ஆள் இல்லையாம் ... 
ரதம் இருக்க ... நாம் எதற்கு .. ????
ஒரு சேய் போதும் .. இன்னொன்னு வேண்டாம் ...
இன்றைய தலைமுறையின் ஏளன பேச்சு !!!!

இடம் வாங்கி ... வீடு கட்ட ...
கடன் வாங்கி ...காடு வித்து  ..
நாம் வாழ்ந்த பூமி பிரிந்து ...
நாலு காசு சம்பாதிக்க ..
மனைவி அவள் சம்மதிக்க ...
பிள்ளை அவன் பிரிந்து அழ ..
நம் நாகரிகம் மறந்து ..
நாகரிகமாய் வாழ்க்கை !!!

முப்பதை தொட்ட நான் ...
முகத்தை உற்று பார்த்தால் ..
முதல் நரை .. மீசையில் மிக தெளிவாய் ...!!!
காலம் பொன் போன்றதாம் .. 
பொண் சேர்க்க வந்த எனக்கு..மறந்தே போச்சு !!!

வீட்டுக்கு அங்கே வெள்ளை அடிக்க ...
தலைக்கு இங்கே கருப்பு அடிக்க ..
காலம் கடந்து .. வாழ்வை வாழ ...
வழக்கமான போராட்டம் !!!

Wednesday, October 22, 2014

தீபாவளி திருநாள் வாழ்த்து!!!


அடம் பிடித்து ஆடை வாங்கி ..
அதில் சின்ன மஞ்சள் தொட்டு ...
அதிகாலை எண்ணெய் இட்டு ...
அம்மா குளிப்பாட்டி ..
ஆயா தலை துவட்டி ...
அப்பா ஆடை இட்டு ...
சித்தி சிகை செய்து ...
அத்தை அறுசுவையை ...
மாமா ஊட்டி விட  ...
தங்கையிட்ட கோலம் தாவி .. 
தாய் மண்ணில் தோழனோடு ...
தடாலடி வெடி வெடித்து ..
இளம் கன்றாய் இருந்த ...
மங்காத நிஜங்கள் ...
மனம் முழுதும் எப்பொழுதும் ...!!!

ஐந்து நாள் பதம் செய்து ...
இந்த நாள் இனிதிட்ட அதுரசம் ...
அர்த்த ராத்திரி குழி பனியாரம் ..
அம்புட்டு அழகாய் அத்தி பூ இட்லி ..
தொட்டுக்க ஆட்டு கறி..
நாக்கு நமக்க நாட்டு கோழி ..
ஆசை தீர ஆம வடை ..
ஏப்பம் வர ஆப்பம் கொஞ்சம் .. 
பால் பணியாரம் ... பஜ்ஜி வேறு ..
பாதி உறவுக்கு .. மீதி இரவுக்கு!!! 

அளவில்லாமல் அமுக்கி விட்டு.. 
அடிவயிற்றில் சுடு சாம்பலிட்டு..
ஆயா வீட்டு திண்ணையிலே ..
அசந்து தூங்கி .. அலறி எழுந்து ..
அழகாய் முடியும் அந்த தீபாவளி !!!

அளவான அஞ்சல் அட்டையில் ...
ஆர்ப்பரிக்கும் ஓவியம் தீட்டி ..
அன்பை பரிமாறிய ..
அமைதியான நாட்கள்.. நினைவில் ...!!!

அவசர உலகத்தில் ...
ஆங்காங்கே வாழ்ந்து கொண்டு ..
நானும் உன்  உறவு என உரக்க கத்தி .. 
மகிழ்வாய் வாழ்வோம் ...
தீபாவளி திருநாளில்  என வாழ்த்தும் ...

வடவன்பட்டி வாலிபன் ..
முரசொலி க 

Tuesday, October 21, 2014

ஐந்து வருட பந்தம் இது !!!


மஞ்சளிலே நூல் தொடுக்க  ..
குங்குமமும் திலகமிட ..
மணவாளன்  துணையாக ...
மணமேடை நிறைவாக ...
சுற்றமும் படை சூழ ...
சுப முகூர்த்த தருணம் அது ...!!!
ஐந்து வருட பந்தம் இது !!!

நெஞ்சத்திலே தஞ்சமாகி ...
பஞ்சணையில் ஒருவராகி ..
இசைந்து இணைந்தாலும் ..
இரு வேறு துருவங்களாய் ...
தொடங்கிய மணவாழ்க்கை அது !!!

உனக்காக நான் மாற .. 
எனக்காக நீ மாற ...
நமக்காக "நாம்" மறக்க ...
அழகான தருணங்கள் ..
அன்பான சீண்டல்கள் -- ஆனால் 
அளவற்ற எதிர்பார்ப்புகள் ...
சுமையான ஏமாற்றங்கள் !!!

விரைவிலே விரிசல் விழ ...
வார்த்தைகளில் விஷமம் எழ ...
ஏன்டா பிறந்தோம் என ...
வேண்டா வெறுப்பாய் வாழ ...
அனேகம்பேர்  கடந்தது தான் - ஆனால் 
நமக்கு புதியது ... கணக்கு வலியது !!!

கடந்து வந்த பாதை...
கரடு முரடு தான் ..
பருவங்களில் தன் இலை துறந்து ..
பச்சையிலை துளிர்வது தானே ...
இயற்கையின்  நியதி ...!!!
நாமும் இயல்பின் பிள்ளைகள் தானே !!!

மகனின் மகிழ்வோடு ..
மனதின் துணிவோடு ...
எனது இணையோடு ...
இனிப்பான வாழ்க்கை ...
இறைவனின் ஆசியோடு !!!

ஆசைகள் குறையாது ...
மோகங்கள் தீராது ...
வம்புகள் ஓயாது ..
வரம்புகள் கிடையாது ...
அன்பு நம்மை ஆளும் வரை ...!!!

இந்நாளில் நமை பிரிந்த ...
அன்பு மாமாவின் ஆசியோடு ..
நீயாக நீயும் ... நானாக நானும் ..
நாமாக நாமும் .. 
நலமாக .. நால்வராக ..
பெற்றோரை அரவணைத்து ...
பேரின்ப குடும்பமாக ...
ஞாலம் வியக்க ...
நாளும் சிறக்க வாழ்வோம் .. !!!

திருமண நாள் வாழ்த்துக்கள்...
அன்பு மனைவிக்கு ..
அளவில்லா முத்தங்களோடு !!!

அன்புடன் ஆசையாளன் ..
முரசொலி க 

Wednesday, September 3, 2014

பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!!! அன்பு செல்லத்துக்கு..!!!

என் அகம் நிறைந்த ...
அன்பு செல்லத்துக்கு..
அகவை நான்கு ... 
அளவில்லா சந்தோசம் பெற்று ..
நீண்ட ஆயுளோடு வாழ, என் இனிய 
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!!!


மீண்டும் ஒருமுறை ...
உன்னருகில் நானில்லை .. 
விரைவில் வருகிறேன் ..
முடிந்த வரை அடி வாங்க !!!

கவிதை பஞ்சம் ..
கவினை கொஞ்ச !!! 
ஆதலால் நிழற்படம் ...
உனக்கு இங்கே சமர்ப்பணம் !!!



கண்ணில் காண 
வரம் கிடந்த நாட்கள்.. 
3டி தந்தது முதல் அச்சு ..
இரண்டாம் நாள்..
இன்ப விழிகள் ..!!!
நான்காம் நாள்...
நவரச பாவனைகள் !!!


இரண்டாம் மாதம்...
இயற்கை ரசித்தாய் ...!!!
மூன்றாம் மாதம் ...
முழுவதும் மாறினாய் ...!!!
நான்காம் மாதம்..
நகைச்சுவை உணர்த்தினாய் ...!!!




ஆறாம் மாதம் ...
அளவுகள் தகர்த்தாய்  ...!!!
ஏழாம் மாதம் ..
எழுந்து காண்பித்தாய் ...!!!



எட்டாம் மாதம் ...
எகிறி தொட்டாய் ...!!!
ஒன்பதாம் மாதம் ...
ஓயாமல் விளையாடினாய் ...!!!




பத்தாம் மாதம் ...
பந்துகள் விரும்பினாய் ...!!!
பதினோராம் மதம் ...
தக்காளி உன் விருந்தாளி !!!






குதிரை ஓடிக்கொண்டே இருக்கும் ...
"பாவமாம் அது" பசி அமர்த்திய 
பாரி வள்ளல் நீ !!!




உன் பறை முழக்கம்...
பத்து மைல் தகர்க்கும் ...!!!
உன் அரை உறக்கம் ...
அத்தனை முறை சாய்க்கும் !!!




ரயிலோடு பேசுவாய் ...
ராகத்தோடு பாடுவாய் ...
மேகம் பார்த்து கற்பனை ...
தாகம் தீர்க்க தென்னை !!!



இருப்பது அரை அடி ...
ஏறுவதோ ஏழு அடி ...!!!
மாந்தோப்பு அது
மரியாதை செய்ய ..
தென்னந்தோப்பு அது
உரிமையோடு உறவாட ...
நீயே ராஜா .... 
உன் பிள்ளையை ..
நீ ரசிக்கும் வரை  !!!

மட்டை பந்தில் 
துரத்தும் வீரன்... !!!
சைக்கிள் ரேசில் ...
சகலகலா வல்லவன் ..!!!



ஓட்ட பந்தயம் ...
ஓயாமல் ஜெயிப்பாய் ...!!!
உடற்பயிற்சி உடனே 
கற்றுகொண்டாய்... !!!

கிராமம் ரொம்ப பிடிக்கும் ...
ஆடு, மாடு ,கோழி , தோட்டம் ,
ஆற்று மணல் .. சேற்று தண்ணீர் ..
வியர்வை , வீரம் , விவேகம் ...
சொந்தங்கள் அன்பு , பந்தங்கள் பாசம் ...
அனைத்தும் ரசிக்கும் ரசிகன் நீ !!!



ஆங்கிலம் , அறிவியல் , கணினி ,
கடற்கரை , கடைகள் , 
ஆதலால் நகரமும்...
நல்லாவே பிடிக்கும் !!!



நாட்கள் போதாது ... 
பக்கங்கள் பத்தாது ...
ஏக்கங்கள் தீராது ...
உன்னை வர்ணிக்க !!!



நண்பர்கள் கூட்டம் 
எப்போதும் உன் நாட்டம் ...
நல்லது மகனே ...
நல்ல தோழமை போதும் 
நாம் விண்ணை தொட !!!



ஏற்றத்தாழ்வு பாராதே ...
ஏமாற்ற நினைக்காதே ...
எப்போதும் உயர்வாய் எண்ணு ...
உழைப்போடு உன்னதமாய் நீ வாழ !!!


முதல் நாள் பள்ளி ..
முதல் காவலர் உடை ...
முதல் கிறுக்கல் ...
முதல் தட்டச்சு ..
முதல் எழுத்துக்கள் ...
அளவில்லா பூரிப்பு ..
உன் வளர்ச்சி காண ...!!!
முயன்றால் முடியும் தம்பி ...
நடத்தி காட்டு  ...!!!
நாங்கள் உன் பக்கம் !!!


இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் 
ஆசை முத்தங்களோடு !!!





Sunday, July 27, 2014

வண்ண மகள் !!!



வண்ண மகள் !!!


தாயோடு சண்டையிட்டு...
உறவோடு உரக்கமோதி ...
ஆசையோடு ஆர்ப்பரித்து ...
புதுமையாய் புனையேற்றி ...
உன்னோடு கதை பேச ..
ஓடோடி உனை உரச ...
கரையோரம் கவின் தேடி ...
இதழோரம் கவிதை பாடி ...
வாராளாம் வண்ண மகள் !!!
அலையெனும் சின்னஞ்சிறுமி !!!

நடுநிசி விழிநீர் !!!


மனதோரம் நினைத்தாலே 
சோர்ந்து விடும் என் மழலை ...
நினைவு முழுதும் நானென்றால் 
நிச்சயம் மயங்கியே விடுவான் ...!!!

அவனோடு விளையாட ...
அவனாக நான் மாற ...
அயராது கதை பேச ...
பிரியாது பிறை பார்க்க ...

தோணாத கற்பனைகள் ...!
நினைக்காத நிஜங்கள் ...!!
நிகழ்த்தியே காட்டும் அவனுக்கு 
நிகர் அவனே தான் ...!!!

பல நேரங்களில்
சிங்கம் IPS..!
சில நேரங்களில்
வீரமாய் வேஷ்டியில் ..!!

அசத்தும் ஆங்கிலம் -அவனின் 
அனேக பேச்சு ..!
அப்பிச்சி அறிந்த சங்க 
தமிழ் உன் மூச்சு ...!!

தாத்தா  தந்த தன்னடக்கம் ...!
பாத்தா பழகிக்கொள்ளும் 
பளீர் ஞானம் ...!!

அப்பத்தா தப்பித்த 
முரட்டு அடி ..!
அத்தைகள் வெக்கப்படும் 
வித்தை வினாக்கள் !!

ஆயாவை மிரட்டும் 
ஆளுமை நேர்த்தி ..!
சித்தப்பாவை சிறைபிடிக்கும் 
அதீத யுக்தி !!

மாமாவை மயக்கும் 
மந்திர பேச்சு ..!!
சித்திகள் சிணுங்கும் 
செல்ல கிச்சில்கள் !!!

அம்மாவை ஆறுதல் படுத்த ..
அப்பா பிழை திருத்த ...
ஆசானும் ஆச்சர்யப்பட ...
எங்கடா நீ அனுபவ பட்டாய் ???

என்னோடு இருந்து விடு ... 
இங்கேயே இரு அப்பா ...
தங்காத வார்த்தைகளா ???
தாங்காத வடுவுகளா ???

என் தங்க மீனே ...
திரவியம் வேண்டி ...
தேசம் தாண்டி ...
பாசம் தொலைத்த 
பாவியடா நான் !!!

புரியாமல்  பிரியவில்லை ..
பிரிவால் புரியாமலும் இல்லை .. 
பாரதம் பண் பட்டிருந்தால் 
பாட்டாளி வீண் போயிருப்பாரா???
பட்டாளி விலை போயிருப்பேனா  ???

விண்ணை பிளக்கும் அழுகை ..
தன்னிலை மறக்கும் பேச்சு ...
அள்ளி கொஞ்சும் அலாதி
சுகம் தொலைத்த துரோகியடா !!!

திண்ணை பள்ளி முன்னமே மூட ...
பண்ணை வீடு தென்னை உதிர ...
என்னை வளர்த்த சொந்தம் பிரிய ...
உன்னை வார்த்த என் மனைவி ஏங்க ...

அன்னையிடம் நீ உறங்க ...
அன்னைதேசம் நான் உதற ...
ஆசையாடா அனாதையாய்
அந்நிய தேசத்தில் வாழ ???

நடுத்தர தகப்பனுக்கு தான்
தெரியும் ...நடுநிசி விழிநீரின்
விசித்திர வலிகள் !!!

சீக்கிரம் வருகிறேன்...
சம்மதம் சொல்கிறேன் ...
சத்தியமாய் நம்பு - இந்த
முறை கடைசி என்று ...!!!

அன்பு அப்பா ,
முரசொலி க


Friday, May 16, 2014

பெண்ணல்ல !!! 

பார்த்தவுடன் காதல் !!!
பழகியவுடன் தேடல் !!!
விரல் சேர்த்தவுடன் ஊடல் !!!

கருப்போ சிவப்போ ..
மாற்றலாம் பிறகு ...
என் தேர்வு ஊதா தான் !!!

இறுக்கி அணைப்பது நான் !!!
உருகி தவிப்பது நீ !!!
வருடி வார்ப்பது நீயும் நானும் !!!

மல்லியாய் சுண்டி இழுப்பது ..
மெல்லிடையா .. சங்கு கழுத்தா ???
வல்லினம் வாழ்வது உன்னாலே !!!

இதழ்களின் எச்சில்கள்...
வரைந்த கோலங்கள்...
அத்தானை மயக்கும் ...
அத்தனை அழகு !!!

எனக்கு மட்டுமே சொந்தம்!!!
எனது புதிய பந்தம் !!!
பெண்ணல்ல !!!
பென் (Pen ) அவள் .. !!! :)

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்