Wednesday, March 8, 2023

மங்கையர் தின நல் வாழ்த்துக்கள் !!!

தந்திர பூமியில்

சுதந்திரத்தை எங்கு தேட ?

மாந்திரீக மானுடத்தில்

மனித நேயத்தை எங்கு தேட?

 

அவசர அரசாங்கம் ..

மிக அவசர அரசாணை ..

அனிதாக்கள் ஆற்றாமையில்

சித்ராக்கள் சந்தேகத்தில்..

சிந்துக்களோ சில துணுக்கு

வரா கணக்கு பற்பல!

இதில் எங்கே தேட

என் குல மாந்தரின்

சுதந்திரத்தை !

 

ஊர் எல்லை தாண்டாத

ஏனைய கிராமத்து பெண்கள்..

உலகம் சுற்றும்

அறிவார்ந்த மங்கையர்கள் ..

இன்டர்நெட் அலசும்

இன்னொரு கூட்டம் ..

 

மாத விடாயில் 

மங்கை இன்னும் திண்ணையில் ..

பள்ளிப் பாதியில் 

முறை மாமானுடன் திருமணம் ...

முப்பது நாளில் 

மூன்றாவது ஜீவன் எங்கே??

இன்னும் நிஜம் இது..

என் வட்டத்தில்!

 

கடல் தாண்டியும் கைதியாய் 

வெளிநாடு வாழ் 

மனைவிகள்!

விண் தாண்டியும் 

விவாத பொருளாய் 

விண்வெளி வீர மங்கை!

பதக்கம் வென்றும் 

சமூக விதி விலக்காய் 

விளையாட்டு வீராங்கனை!

 

இப்படியாய்

ரகங்கள் பலநூறு ..

ராகங்கள் பதினாறு..

துருவங்கள் இரண்டல்ல

சுதந்திரத்தின் இடைவெளியோ ஏராளம் !

எப்படி ஒப்பிட

எது சுதந்திர இந்தியாவென?

 

இரவில் பெண் தனியாக

நடக்கட்டும் - காந்தி

நிமிர்ந்த நன்னடை..

திமிர்ந்த ஞானச் செருக்கு - பாரதி

 

இப்படியாய்

அடுக்கலாம் ஆயிரங்கள் ..

புதுமைப்பெண் யாரென்று..

சுதந்திரம் எதுவென்று..

ஆனால் அதை

அடைந்தவரோ

பல ஆயிரத்தில் ஒருவரே!!

 

பெண் சுதந்திரமோ - இன்றளவில்

காத்திருந்தும் மண்ணை

பிளக்கும் முதல் இலை கூட அல்ல !

மாற்றாக மனதடியில் மறைந்தே

வளரும் வேர் !

 

பெண்ணே..

உன் வளர்ச்சி

வேங்கையாய் சீறட்டும்..

சுனாமியாய் சுழலட்டும்..

பட்டி தொட்டி எல்லாம்

சுதந்திர வேட்கைத்தீ

திசை மறந்து பரவட்டும் ...


பெண்ணே..

எதுவும் உன்னால் சாத்தியம்

ஆதலால் ஆசை கொள்..

ஆசையே அறிதல் தரும் !

அறிதலே புரிதல் தரும் !

புரிதலே தேவை தரும்!

தேவையே தேடல் தரும்!

உன் தேடல் நாளைய

சுதந்திரத்தின்

விடியல் ஆகட்டும்!

 

நம் பெண்கள்..

இருபதில்..

இருமடங்கு பண்படட்டும்..

முப்பதில்

விரும்பிய துறையனைத்திலும்

முன்னேறட்டும் ..

நாற்பதில்

நாடாளட்டும்..

ஐம்பதில்

அனுபவம் பகிரட்டும்

அடுத்த தலைமுறைக்கு!

 

செல்வங்கள் சேர்க்கட்டும்

சொந்தங்கள் மறவாமல் ..

நடுநிலை அடை மழையில்

நம் சமூகம் சங்கமிக்கட்டும்...

 

ஆணும் பெண்ணும்

அடுத்தவர் வெற்றிகளை

அடிக்கடி கொண்டாடட்டும் !

அன்று நின்று சொல்வேன்

பெண் சுதந்திரம் எது என்று!

 

அகம்பாவம் வேண்டாம்

பரிதாபம் வேண்டாம்

அடங்கவும் வேண்டாம்

அடக்கவும் வேண்டாம்

ஆடவும் வேண்டாம்

ஆணவமும் வேண்டாம்

அன்பால் அகம் அளப்போம் ...

அனைவரும் சுதந்திரம் சுவாசிப்போம்!!

 மங்கையர் தின நல் வாழ்த்துக்கள் !!!  

Friday, January 14, 2022

🌾 🌾 பொங்கலோ பொங்கல் - மலேசியாவில் மறுபடியும் !!!🌾✨


தமிழால் இணைந்த இந்த அந்நிய பூமியில்
தாய் நாட்டு பாரம்பரியத்தில்
பாதியை ஞாபகம் கொண்டு ,
மீதியை ஆசை மட்டும் கொண்டு

உறவுகளை பார்க்க இயலாமல்
மரபுகளை மறக்காமல்
அலுவலகம் அரை நாள் விடுப்பெடுத்து
பட்டித்தொழு இல்லா பட்டிணத்தில் ,
பொங்கல் மலேசியாவில் இன்று !

அருகில் இருந்த தோட்டத்தில்
தமிழ் அண்ணனிடம் செங்கரும்பு !
மாடி தோட்டத்து ரோசாப்பூ !
நண்பன் வளர்த்த மஞ்சள் கொத்து!
பூமி புத்திரனிடம் வெற்றிலையும் மற்றவையும் !

அடுப்பில் அலங்காரம்  இட்டு
அழகு மனையாள் பொங்கல் வைக்க...
மகளோ எழுவணி மடைபோல 
கொஞ்சி பேசி கோலம் போட...

தலைமகன் இறக்குமதியான 
இந்திய ஆடைகளை 
மிடுக்காய் உடுத்தி மேற்பார்வை பார்க்க !
பால்பானை பொங்கியது 
கவலைகள் எல்லாம் கரைந்தோடியது!

தடுத்தால் அடுத்த வீடு
இருந்தாலும் இலை இட்டு
படையல் பூஜை !
பூசணி இலையில் 
சூரியனுக்கும் சேர்த்து !

துள்ளி வரும் காளைகளை
தூரத்தில் இருந்து பார்த்த
காலத்தில் , என்று நாம் இளைஞன்
ஆவோம் என்ற ஏக்கம் !!!!

இளைஞன் ஆனபோது
இல்லாமலே போனது
ஜல்லிக்கட்டு நமது ஊரில் ...!!!
மீண்டது இளைஞர் மெரினா புரட்சியால் !
வரலாறு பேசும் நம் வயசானாலும் !

தாவணி பெண்களை
தை மாத திருவிழாவில்
காண்பெதெல்லாம்
கானல் நீராகவே ஆகிவிட்டது !!!

ஆடுகளும் மாடுகளும்
அங்கங்கே மட்டுமே
தென்படுகின்றன தமிழகத்தில் !!!
அசைபோட உணவும் இல்லை
ஆசையோட பழக ஆட்களும் இல்லை
அநாதையாய் ..!!!

காலங்கள் சில பல
மாற்றங்களை மனிதனில்
விதைத்தாலும் , விளையும்
பூமியெல்லாம் வளரும்
கட்டிடங்கள் கண்களுக்கு
அழகானாலும் , வயிற்றுக்கு
வருத்தமே !!!

புழுதி மணலில் புரண்டெழுந்து ,
பொழுது சாய்கையில் குழு சேர்ந்து ,
ஆலம் விழுதினில் அசைந்தாடி ,
காவிரி படுகையில் காவியம் பாடி ,
வைகையிலே வசந்தம் தேடி ,

தாமிரபரணியில் தாவிக்குதித்து ,
சிறுவாணியில் சிரித்து மகிழ்ந்து ,
வந்தோரை வாழவைத்து மகிழ்ந்த 
என் அருமை தமிழ் சொந்தங்கள் 
அனைவருக்கும் ,

மாவிலை தோரணமும் 
மஞ்சளிலே மகுடமும் 
வரவேற்க ,
சோலையிலே விளைந்த 
மெல்லிய நெல்மணிகள்
தகதக்க,

காலையிலே கறந்த 
காங்கயம் பசும்பாலோடு
ஆலையிலே வார்த்த
வெல்லம் இணைந்து ,

மண்பானை மணமனக்க
மகிழ்வு பொங்கி ..
தாவணி பெண்கள் 
மாமனை நோக்கமிடும் 
நொடிப்பொழுதினில் ..

சிறார்கள் பொங்கலோ பொங்கல் என 
ஆர்ப்பரிக்கும் இனிய இயல்புகள்!
என்றும் தொடர இறைவனை வேண்டி 

நிறைந்த மனதோடு
பொங்கி வழியும் பொங்கல் பானை போல்
அனைவரது வாழ்விலும் இன்பம் பொங்கி
இனிக்கும் கரும்பு போல்
இனியும் நம் வாழ்வு சிறக்க
உங்கள் கிராமத்து நண்பனின்
பொங்கல் நல் வாழ்த்துக்கள் !!!
நட்புடன் ,
முரசொலி க !!


Sunday, August 15, 2021

75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் பெண்களின் சுதந்திரம்!

ஞாயிறு மாலை ..

இனியதொரு வேளை..

பறம்பின் உறவுகளாம் ..

பாரியின் பங்காளிகளோடு..

 

பொற்கால இந்தியாவின் ..

எழுபத்தைந்து வருட

சுதந்திர வரலாற்றில் ...

பெண்களின் சுதந்திரம்

இந்த கிராமத்தானின் 

உணர்வாய்..!

 

தந்திர பூமியில்

சுதந்திரத்தை எங்கு தேட ?

மாந்திரீக மானுடத்தில்

மனித நேயத்தை எங்கு தேட?

 

அவசர அரசாங்கம் ..

மிக அவசர அரசாணை ..

அனிதாக்கள் ஆற்றாமையில்

சித்ராக்கள் சந்தேகத்தில்..

சிந்துக்களோ சில துணுக்கு

வரா கணக்கு பற்பல!

இதில் எங்கே தேட

என் குல மாந்தரின்

சுதந்திரத்தை !

 

ஊர் எல்லை தாண்டாத

ஏனைய கிராமத்து பெண்கள்..

உலகம் சுற்றும்

அறிவார்ந்த மங்கையர்கள் ..

இன்டர்நெட் அலசும்

இன்னொரு கூட்டம் ..

 

மாத விடாயில் 

மங்கை இன்னும் திண்ணையில் ..

பள்ளிப் பாதியில் 

முறை மாமானுடன் திருமணம் ...

முப்பது நாளில் 

மூன்றாவது ஜீவன் எங்கே??

இன்னும் நிஜம் இது..

என் வட்டத்தில்!

 

கடல் தாண்டியும் கைதியாய் 

வெளிநாடு வாழ் 

மனைவிகள்!

விண் தாண்டியும் 

விவாத பொருளாய் 

விண்வெளி வீர மங்கை!

பதக்கம் வென்றும் 

சமூக விதி விலக்காய் 

விளையாட்டு வீராங்கனை!

 

இப்படியாய்

ரகங்கள் பலநூறு ..

ராகங்கள் பதினாறு..

துருவங்கள் இரண்டல்ல

சுதந்திரத்தின் இடைவெளியோ ஏராளம் !

எப்படி ஒப்பிட

எது சுதந்திர இந்தியாவென?

 

இரவில் பெண் தனியாக

நடக்கட்டும் - காந்தி

நிமிர்ந்த நன்னடை..

திமிர்ந்த ஞானச் செருக்கு - பாரதி

 

இப்படியாய்

அடுக்கலாம் ஆயிரங்கள் ..

புதுமைப்பெண் யாரென்று..

சுதந்திரம் எதுவென்று..

ஆனால் அதை

அடைந்தவரோ

பல ஆயிரத்தில் ஒருவரே!!

 

இரவா ... பகலா ...

ராவணனா ... காலாவா..

சினிமாக்கள் சித்தரிக்கும்

நினைவுகளும் சிலாகிக்கும்..

பெண் சுதந்திரமோ - இன்றளவில்

காத்திருந்தும் மண்ணை

 பிளக்கும் முதல் இலை கூட அல்ல !

மாற்றாக மனதடியில் மறைந்தே

வளரும் வேர் என்று!

 

பெண்ணே..

உன் வளர்ச்சி

வேங்கையாய் சீறட்டும்..

சுனாமியாய் சுழலட்டும்..

பட்டி தொட்டி எல்லாம்

சுதந்திர வேட்கைத்தீ

திசை மறந்து பரவட்டும் ...

அன்று பிறப்பேன்

தேவாங்கு அவதாராமாய்

உன் சுதந்திர திசை காட்ட !!

 

பெண்ணே..

எதுவும் உன்னால் சாத்தியம்

ஆதலால் ஆசை கொள்..

ஆசையே அறிதல் தரும் !

அறிதலே புரிதல் தரும் !

புரிதலே தேவை தரும்!

தேவையே தேடல் தரும்!

உன் தேடல் நாளைய

சுதந்திரத்தின்

 விடியல் ஆகட்டும்!

 

நம் பெண்கள்..

இருபதில்..

இருமடங்கு பண்படட்டும்..

முப்பதில்

விரும்பிய துறையனைத்திலும்

முன்னேறட்டும் ..

நாற்பதில்

நாடாளட்டும்..

ஐம்பதில்

அனுபவம் பகிரட்டும்

அடுத்த தலைமுறைக்கு!

 

செல்வங்கள் சேர்க்கட்டும்

சொந்தங்கள் மறவாமல் ..

நடுநிலை அடை மழையில்

நம் சமூகம் சங்கமிக்கட்டும்...

 

ஆணும் பெண்ணும்

அடுத்தவர் வெற்றிகளை

அடிக்கடி கொண்டாடட்டும் !

அன்று நின்று சொல்வேன்

பெண் சுதந்திரம் எது என்று!

 

அகம்பாவம் வேண்டாம்

பரிதாபம் வேண்டாம்

அடங்கவும் வேண்டாம்

அடக்கவும் வேண்டாம்

ஆடவும் வேண்டாம்

ஆணவமும் வேண்டாம்

அன்பால் அகம் அளப்போம் ...

அனைவரும் சுதந்திரம் சுவாசிப்போம்!!

 

ஜெய் ஹிந்த்!!!

நன்றி!

Sunday, July 11, 2021

எருதுகட்டு ஏன் கொண்டாடுகிறோம்..??!!

 #எருதுகட்டு_ஏன்_கொண்டாடுகிறோம்..??!!

மயில்ராயன் கோட்டை நாட்டின் அன்பு உறவுகளுக்கும், வழிகாட்டிகளுக்கும், துணை நின்று தோள் கொடுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்..!
மயில்ராயன் கோட்டை நாட்டின் (மேலவகை) கிராமங்கள் கொண்டாடும் #எருதுகட்டு விழா எத்தனை வீர வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த விழா என்பதும், எத்தனை தெய்வாதீனம் பொருந்திய பெருவிழா என்பதும் நம் அருமை உறவுகளுக்கு தெரிந்த ஒன்றே..!
இருந்தாலும் நம்மில் பலர் இதை அறியாதவர் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையிலும், அவர்களும் அறிந்து அருள் பெறவும், உலகிற்கு நம் மயில்ராயன் கோட்டை நாட்டின் பெருமைகளை எடுத்துரைக்கும் விதமாக இந்தப் பதிவு அமையும் என்று நம்புகிறேன்!
#எருதுகட்டு எதற்காக கொண்டாடுகிறோம்.. அதன் பின்ணணி என்ன?! வீரத்திருமகள் வீராயி அவர்களும் , சந்திவீரன சாமிக்கும் பின்னால் பொதிந்திருக்கிற வீரத்திற்கும் தியாகத்திற்கும் பெயர் போன வரலாறு என்ன என்பதை இப்பதிவில் விளக்க முயற்சித்திருக்கிறேன்..!
எந்த ஒரு நிகழ்விற்கும் ஒரு காரணம் இருந்தே தீரும். உந்து சக்தியால் தானே உலகமே இயங்குகிறது.. அப்படி இந்த எருதுகட்டின் வீர வரலாற்றைப் பார்க்கும் முன்..
ஜெயம்கொண்டநிலையில் நைனார் அழகருக்கு மகளாகவும், சந்தனக் கட்டை ஊசி என்பவருக்கு சகோதரியாகவும் பிறந்த #வீராயி என்னும் வீரப்பெண்மணி மகத்தான தெய்வமாக மாறிய வரலாறு காணும் முன், அதற்கு உந்து தலாக இருந்த காரண காரிய நிகழ்வுகளைச் சுருக்கமாக பார்ப்போம்.
அது 16ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலம், மதுரை மஹாஸ்தானத்தில் கிருஷ்ணப்ப நாயக்கர் ஆட்சிக்காலம். ராமேஸ்வரம் கோயில் யாத்திரை என்பது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக விளங்கி வந்தது.. ஆனால் இப்போது இருப்பது போல அப்போது பாலங்களோ பேருந்து ரயில் போக்குவரத்திற்கோ வாய்ப்பில்லை.. படகுப் பிரயாணம் தான். மிகவும் சிரமப்பட்ட யாத்ரீகர்களுக்கு ராமநாத புரத்தைச் சேர்ந்த #சடைக்கன்உடையதேவர் என்பவர் உதவி புரிந்து வந்திருக்கிறார்.. இவரது செயலில் மனம் மகிழ்ந்த #கிருஷ்ணப்பநாயக்கர் அவருக்கு 72 பாளையங்களைக் கொடுத்து தலைமைப் பொறுப்பை கொடுத்து பரிபாலிக்கக் கூறினார்.. அந்தப் பகுதிகள் கிருஷ்ணதேவராயரின் விஜயநகரப் பேரரசின் கீழ் கப்பம் கட்டும் பகுதிகளாக இருந்து வந்தன.. இப்படித்தான் முதன் முதலில் #சேதுபதி_வம்சம் உருவானது.
இவர்வழி வந்தவர்களான..
இப்படியாக வழிவழியாக தலைமைப் பொறுப்பில் இருந்து ஆண்டுவந்தனர்.
இவர்களுக்கு அடுத்தபடியாக வந்தவர் #கிழவன்சேதுபதி..
அது ஒருபுறம் இருக்கையில்..
வடதிசை மற்றும் வடமேற்கில் #கள்ளர்நாடுகள் தன்னிலை நாடுகளாக செல்வச்செழிப்போடு யாரையும் சாராமல் விளங்கி வந்தன.. அதில் முதன்மை நாடு நமது #மயில்ராயன்கோட்டைநாடு.(தன்னாட்சி முறை கொண்ட நாடு)
இதை பொறுக்காத , திருமலைரகுநாதசேதுபதி எப்படியாவது கள்ளர் நாடுகளை அடிமைப்படுத்தி விட நினைத்து பல தாக்குதல்களைத் தொடுத்தார், தாக்குதல்களில் நிலைகுலையாத பதிலடி கொடுத்த கள்ளர் நாடுகள் அவர்களுக்கு பெரும் சவாலாக விளங்கியது.. எனினும் சில இடங்களில் வரி தரும் நிலை ஏற்பட்டது, பல இடங்களை அவர்களால் அசைக்கக் கூட முடியவில்லை..
இதனால் ஒரு உபாயம் யோசித்த திருமலைரகுநாதசேதுபதி, கள்ளர் நாடுகளில் அருகில் பல அதிகார மையங்களை அமைத்து ஆட்படுத்த நினைத்து நாலுகோட்டையில் பூதலூர் வட்டம் முத்தமனூரைச் சேர்ந்த #சிப்பிநாட்டுமறவர் களை பணியமர்த்தி சோழபுரத்தில் ஒரு கோட்டை கட்டி அதிலிருந்து வரிவசூல் நெற்களஞ்சியம் அமைத்து செயல் படுத்தினார். இருந்தாலும் மயில்ராயன்கோட்டை நாடு அவர்களுக்கு சிம்மசொப்பனமாகவே இருந்தது.
கள்ளர் நாடுகளில் முதன்மையாக எதிர்க்கும் மயில்ராயன் கோட்டை நாட்டை நெருக்கடிக்குள் உள்ளாக்க #ஐந்துநிலைமறவர்கள்
#பரம்புநாட்டுமறவர்கள் போன்றோரையும் படையில் இணைத்துக் கொண்டு போராடியும்.. மயில்ராயன் கோட்டை நாட்டின் அம்பலக்காரர்களும் வாளெடுத்துப் போராடியதால் எதிரிகளால் ஒன்றும் செய்ய முடியாமல் பின்வாங்கி விட்ட வரலாறும் உண்டு.
அதன் பிறகு மயில்ராயன் கோட்டையில் நெற்களஞ்சியம் அமைக்கவோ வரிவசூல் செய்யவோ எந்த தளபதியும் முன்வரவில்லை..!
இப்போது தான் முக்கியமான ஒரு திருப்பம்..
சேதுநாட்டின் அடுத்து வந்த கிழவன் சேதுபதி எதற்கும் மசியாத கள்ளர் நாடுகள் மற்றும் மயில்ராயன்கோட்டை நாட்டின் வீரத்தைக் கண்டு சிலிர்த்துப் போன கிழவன்சேதுபதி தனது போர்படையில் இருந்த சிப்பாய்களை தளபதிகளாக்கி 72 ராணுவப் பிரிவுகளை உருவாக்குகி அங்கே நெருக்கடியான வரி வசூலை மேற்க்கொள்கிறார்கள் கள்ளர் நாடுகள் முழுவதும் ஆங்காங்கே கோட்டைகளை எழுப்புகிறார்கள்..!
ஒரு கட்டத்தில் மன்னனின் அடிமைப் படுத்தும் எண்ணமும் மயில்ராயன் கோட்டை நாட்டில் பலிக்க வில்லை என்பதை அறிந்த #நொண்டிமாறன் எனும் மறவன் தானாக முன் வந்து தான் அந்த வேலையை செய்து முடிப்பதாகவும், மயில்ராயன் கோட்டை நாட்டில் வரிவசூல் செய்து, நெற்களஞ்சியங்கள் அமைத்து அந்த கள்ளர் நாட்டை கிழவன் சேதுபதிக்கு கப்பம கட்ட வைப்பதாகவும், மறுப்பு தெரிவிக்கும் அம்பலகாரர்கள் தலையை தங்கள் காலடியில் போடுகிறேன் என்று வீராவேச வசனங்கள் பேசினான் கிழவன் சேதுபதியிடம்.
இதை நம்பிய சேதுபதி அவனுக்கு சில வாக்குறுதிகளுக்கு கொடுத்து அனுப்பி வைத்தார்..
ஆனால்.. மயில்ராயன் கோட்டை நாட்டின் வீரப்பிரதாபங்கள் குறித்து அறிந்து வைத்திருந்த #நொண்டிமாறன் .. உள்ளே நுழையும் போது நரியின் தந்திரத்தோடு உள்ளே நுழைந்து..
பல அம்பலகாரர்களைச் சந்தித்து நட்புடன் பழகி வந்தான்.. பின்னர் தக்க சமயம் பார்த்து தான் வந்த வேலையை மெதுவாக தந்திரமாக ஆரம்பித்தான்..
அதாவது சேதுநாட்டு கிழவன் சேதுபதி மயில்ராயன் கோட்டை நாட்டு மக்களுக்கு பல நண்மைகள் புரிவதற்காகவும் வளர்ச்சிகளை தருவதற்காகவும் சித்தமாக இருப்பதாக கவர்ச்சியாக நயவஞ்சகமாக பேசி மூன்று இடங்களில் கோட்டைகள் கட்ட அணுமதி வாங்கினான்..
ஒன்று ஏரியூர் அரசூரணிக் கரையில் ஒரு கோட்டையும், சந்திரபட்டியில் சூரியன் கோட்டையும் , மல்லாகோட்டையில் செட்டி ஊரணி கோட்டையையும் கட்டி முடித்தான்‌..
இந்த 3 கோட்டைகளின் திறப்பு விழாவிற்கு மயில்ராயன் கோட்டை நாட்டின் பொதுமக்களையும் அம்பலகாரர்களையும் அழைத்து விருந்தளிக்க ஏற்பாடு செய்திருந்தான் #நொண்டிமாறன்.
திறப்புவிழா நாளன்று எல்லோரையும் அழைத்து விருந்துவைத்தான், விருந்துண்ட அனைவரும் மயங்கி விழுந்து இறந்தனர்.
ஆம்.. வீரத்தால் வெற்றிபெற முடியாத மயில்ராயன் கோட்டை நாட்டின் ஒப்பற்ற வீரர்களை விஷம் வைத்துக் கொன்றொழித்தான் மகாபாதகன் நயவஞ்சகன் நொண்டி மாறன்.
அதனால் தான் மூன்றுகோட்டைகளையும் நாட்டின் மையப் பகுதியில் அமையுமாறும், ஒரே நேர்கோட்டில் உள்ள பகுதியில் அமையுமாறும், மூன்று கோட்டைகளையும் ஒரே நேரத்தில் திறக்கும் படியும் நேரம் குறித்துக் காத்திருந்தான் நொண்டி மாறன்.
உணவருந்தி இறந்து கிடந்த உத்தம வீரர்களின் பிரேதங்களில் இருந்து தலைகளைக் கொய்ய ஆரம்பித்தார்கள் நொண்டிமாறனின் ஆட்கள். ஒவ்வொரு கோட்டையிலும் 250 ராணுவ வீரர்களை பணியில் அமர்த்தி யிருந்தான்.
அதில் சந்திரபட்டி சூரியன் கோட்டை என்பது அடர்ந்த காட்டுப் பகுதி.‌. எதாவது ஆபத்து வந்தால் காட்டில் புகுந்து தப்பித்து விடலாம் என்பது அவனுடைய எண்ணம்.
கொய்த தலைகளை கூடைக்கு 9 தலைகளாக வைத்து கட்டி சூரியன் கோட்டையில் சேர்க்குமாறு உத்தரவிட்டான். தலை சுமப்பவர்கள் மயில் ராயன் கோட்டை நாட்டு மக்கள் ஆதலால் அவர்கள் கையில் ஒரு ஓலையும் கொடுத்து அணுப்ப பட்டது.
இது இவ்வாறு நடக்கையில், ஒரு நாவிதன் தலையில் வெட்டுப்பட்ட தலைகளின் கூடையை வைத்து, கையில் ஓலையும் கொடுத்து அணுப்ப பட்டது.. நடுவழியில் ஓலையில் என்ன எழுதியிருக்கிறது என்பதை அறிய நாவிதனுக்கு ஆசை பிறந்தது..
கூடையை இறக்கிவைத்து ஓலையைப் பிரித்துப் படித்தான்.. அதில் #சுமந்தான்தலைபத்து என்று எழுதியிருந்தது.. ஒன்றும் புரியாத நாவிதன்.. கூடையைப் பிரித்துப் பார்த்தான்.. பார்த்தவுடன் ஓ... வென்று கதறி பதறி விழுந்துவிட்டான்.. அதில் தலைகள் இருப்பது கண்டு ஐயோ என அலறினான்..
அந்தத் தலைகளில் ஒன்று வீரப்பெண்மணி வீராயியின் கணவருடையது..
இதைக்கண்ட நாவிதன் கட்டாணிபட்டி நோக்கி ஓடுகிறான், ஊருக்குள் சென்று விஷயத்தை கண்ணீர் மல்க விவரித்தான். பின்பு வீராயியை சந்தித்தவன் அவள் கணவரையும் கொன்று விட்டதாக அழுது புலம்பித் தீர்த்தான்.. சொல்லொனாத் துயரமும், கணவனும் மக்களும் இறந்த செய்தி கேட்டு நெஞ்சம் வெடித்து சிதறி ஆற்றொனா கோபமும் கொண்ட #வீராயி.. நொண்டி மாறனை வதம் செய்து அவன் கோட்டைகளை எரித்துச் சிதைக்க சித்தம் கொண்டு புயலென மாறி மக்களைத் திரட்டிக்கொண்டு ஆயுதங்களுடன் ஆவேசமாக அவனைத் தேடுகிறாள்.. இவர்கள் வருவதை எப்படியோ தெரிந்து கொண்ட நொண்டி மாறனோ உயிர்பிழைக்கும் பொருட்டு எப்போதோ அந்த இடத்தை விட்டு காட்டுப் பகுதிக்குள் ஓடி விட்டிருந்தான்...
மக்களோடு மக்களாக எங்கு தேடியும் அவனைக் காணவில்லை..
சூரியன் கோட்டையில் அவர்கள் கண்ட காட்சி வீராயியை இன்னும் அதிக கோபப்படுத்துகிறது.. எங்கு காணினும் மனிதத்தலைகள், பிரேதங்கள், ரத்த வெள்ளம்..
தெய்வமே உனக்கு கண்ணில்லையா? எப்படி இப்படி ஒரு அநியாயத்திற்கு இடம் கொடுத்தாய்?! என்று நெஞ்சம் வெடித்து பதறினார்கள்...
மக்களும் வீராயியுடன் சேர்ந்து மதம் பிடித்த யானை போல் நாலாபுறமும் தேடுகிறார்கள்.. இந்த மஹா நம்பிக்கை துரோகியை உயிரோடு விடக்கூடாது என்று சூளுரைத்து பல இடங்களில் தேடுகிறார்கள்.. ஆனால் நொண்டி மாறனோ அவனது ஆட்களோ கண்ணில் படவில்லை..!
பல நாட்கள் தேடுலுக்குப்பின் மக்கள் வீராயியை சமாதானப்படுத்தி ஊருக்கு அழைத்து வந்தார்கள்.. ஆனால் மனதில் எரிந்து கொண்டிருந்த பழிவாங்கும் தீ அவளை உண்ணவோ உறங்கவோ விடவில்லை.. ஊணுறக்கம் இன்றி வீராயி சித்தப் பிரம்மை பிடித்தவள் போல் வானத்தைப் பார்த்து புலம்பிய படியே இருந்தாள்.. பழிவாங்கும் உணர்வு சற்றும் குறையாமலும் ஊணுறக்கம் இன்றியும் இருக்கிறாள்.. என்று அந்த துரோகி நொண்டிமாறனைக் கொன்று அவன் ரத்தத்தை என் மண்ணில் தெளிக்கிறேனோ அன்றுதான் என் ஆத்திரம் தீரும் என்று திரும்பத் திரும்ப அதையே கூறிக்கொண்டு இருந்தாள்..
குல தெய்வங்களை துணைக்கு அழைக்கிறாள். இனிமேல் என்ன செய்யப் போகிறோம் என்று செய்வதறியாது திகைத்து சிந்தித்தும்..
பல நாட்கள் தூக்கம் இல்லாததால் அசதியாக இருந்தவள் அப்படியே உறங்கி யும் போனாள்..
தூக்கத்தின் கனவில் வீரண சாமி வருகிறார்.. தாயே கலங்காதே.. உன் குல விளக்கை அணைத்து பல மக்கள் இறப்பிற்கு காரணமான பாதகன் திருமயத்திலே பதுங்கியிருக்கிறான். அவனைத் தேடிக் கொன்று, வென்று அவன் தலை கொய்து வருவாயாக.. என்று ஆசீர்வதித்து அசரீரியாய் மறைந்து போனார் வீரணசாமி.
காலையில் எழுந்த வீராயி, மக்களைக் கூட்டி நடந்ததை விவரிக்கிறார்.. இதைக் கேட்ட மக்கள்.. வடவன்பட்டியில் நாட்டுக் கூட்டத்தைக் கூட்டி பொன்முடி வைத்து யார் சென்று அவனை கொன்று வருவது என்ற முடிவுக்கு வரவிருக்கிறார்கள். ஆனால் சற்றும் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மின்னலென வீரத்தாய் வீராயி பொன்முடியை எடுத்துச் சூடிக்கொள்கிறாள்‌.
அதை எதிர்பாராத மக்கள் வீராயியை கண்டனர்.. பொன்முடி தரித்து நிற்கையில் அவள் வீராயி போல இல்லை.. கொடூர ரூபம் கொண்ட காளியாக தெரிந்திருக்கிறாள்.
மக்கள் வீராயியின் முடிவுக்கு மதிப்பளித்து, குல தெய்வங்களை வேண்டி அவளை திருமயம் நோக்கி கொண்ட காரியம் வெற்றிபெற வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்..
பல காடுமேடுகள் இடர்ப்பாடுகள் கடந்து திருமயத்தை அடைகிறாள். அப்போது வீரவர்மன் என்ற மன்னன் திருமயத்தை ஆண்டு வருகிறான்..
வேகமாகச் சென்ற வீராயி விவேகத்தின் பொருட்டு நிதானித்து கோட்டை வாசலில் போய் நிற்கிறாள்..
வாயிற்காப்பாளர்கள் என்ன வேண்டும் என்று கேட்கிறார்கள்..
வேலை தேடி வந்திருக்கிறேன் என்கிறாள் வீராயி.. நீண்ட விவாதங்களுக்குப் பிறகு மன்னரிடம் அழைத்துச் செல்லப் படுகிறாள் வீராயி..
பெண்ணே யாரம்மா நீ? எங்கிருந்து வருகிறாய்?!
கண்களில் எரிந்த கோபக்கனலையும் மனதில் பொதிந்திருக்கும் கோபத்தையும் அடக்கி விட்டு பொறுமையாக பதில் கூறுகிறாள் வீராயி..
"ஐவர் ஆண்டநாடு, வீரத்திற்கும் வெற்றிக்கும் புகழ்பெற்ற நாடு எங்கள் மயில்ராயன்கோட்டை நாட்டில் இருந்து வருகிறேன்"
அப்படியா?! சரி என்னவாயிற்று உன் நாட்டிற்கு?! நீ ஏன் இங்கு வேலை தேடி அலைகிறாய்?!
நாடு பஞ்சம் போனதால் தஞ்சம் பிழைக்க இங்கு வந்தேன்..
வஞ்சத்தை நெஞ்சத்தில் நிறுத்திக்கொண்டு அஞ்சாமல் பதிலுரைத்தாள் வீரத்தாய் வீராயி"..
அவளது உறுதியையும் நெஞ்சுரத்தையும் கண்ட மன்னர் பணி தர இசைந்தார்.
சரி என்னவேலை செய்வாய்?!
இந்த அரண்மனையை சுத்தம் செய்யும் வேலை கொடுங்கள் செய்கிறேன்..!
அதே துப்புறவு வேலை கொடுக்கப் பட்டது.. வீராயி தான் வந்த வேலையிலும் கண்ணும் கருத்துமாக இருக்கிறாள்.. அரண்மனை முழுவதும் கண்காணிக்கிறாள்..
நாட்கள் கடக்கிறது.. வந்த வேலையில் ஒரு முன்னேற்றமும் இல்லாதது கண்டு மனம் வெதும்புகிறாள் வீராயி..
என் லட்சியம் நிறைவேறாதா ஆண்டவனே.. எம் மன்னனையும் மண்ணின் மைந்தர்களையும் கொன்ற நயவஞ்சகனின் தலையைக் கொய்யாமலே திரும்ப வேண்டிவருமா?! என இரவில் தனியாகப் புலம்புகிறாள்.
அன்றிரவு கனவில் மீண்டும் வீரண சாமி வந்து.
"தாயே.. கலங்காதே.. இன்னும் ஒரு வாரகாலம் பொறு. ஆனி வெள்ளியில் வளர்பிறை தினத்தில் நீ நினைத்தது நிறைவேறும்.. என்று கூறிவிட்டு மறைகிறார்..
இதன் மூலம் லட்சியம் பாதி வெற்றியடைந்த களிப்பில் இருக்கிறாள் வீராயி..
ஆனால் நொண்டி மாறனின் இருப்பிடம் மட்டும் இன்னும் ரகசியமாக உள்ளது என்பதை ஆலோசித்த வீராயி.. நொண்டி மாறன் நள்ளிரவில் தான் கோட்டைக்கு வருவான் என்பதையும், பகலில் ஊற்சுற்றப் போய் விடுவான் என்பதையும் தெரிந்து கொள்கிறாள் வீராயி..
வளர்பிறை நாளும் வருகிறது.. அன்றிரவு நொண்டி மாறன் தலை கொய்யும் பொருட்டு ரகசியமாக அரண்மனைக்குள் நுழைகிறாள் வீராயி..
அரண்மனை வளாகத்தில் சொறுகப்பட்டிருந்த வீரவர்மனின் வாள் ஒன்றை உருவிக்கொண்டு புயல் வேகத்தில் நொண்டி மாறனின் அறையை அடைந்தாள்.. வந்தவள் வேகம் கண்டு தெய்வாதீனமாக அறைக்கதவுகள் திறந்து, அவள் உள்சென்றதும் தானாக மூடிக்கொண்டன..!
அங்கே உறங்கிக் கொண்டிருந்த நொண்டி மாறனின் முன்பு நின்று வாளால் தரையைத் கீறி சப்தம் எழுப்பி அவளை எழுப்புகிறாள்..!
"அடேய் துஷ்டனே, துரோகியே, நயவஞ்சக நரித்தனத்தால் நீ முதுகில் குத்திய மயில்ராயன் கோட்டை நாட்டின் கள்ளச்சி தனியாக வந்திருக்கிறேன்.. தைரியமிருந்தால் எழுந்திரு.. முன்னால் போகவிட்டு முதுகில் குத்துவதா வீரம். நெஞ்சிற்கு நேரே வாள்சுளற்றி நெஞ்சில் குத்துவது தான் வீரம்.. அதை நீ இன்று
உணர்வாயடா அற்பனே.. இனிமேல் என்நாட்டிற்கு மட்டுமல்ல.. எந்த நாட்டிற்கும் துரோகம் செய்ய நினைக்கும் எவனுக்கும் உன் சாவு ஒரு பாடமாக அமையட்டும்"
அரண்டு எழுந்த நொண்டி மாறன், இவள் தரித்து நின்ற காட்சி அவனுக்கு சாதாரணமாக இல்லை..
வானம் இடிமுழங்க மின்னல்கள் பின்னலிட தலைவிரி கோலமாய் கண்களிலே கோபமுமாய்.. வலது கையில் உயிர் பறிக்கும் வாளுமாய், சிவப்பு ஆடை தரித்து வானுக்கும் பூமிக்குமாய் விஷ்வரூபமெடுத்து வந்த காளியைப்போல் அவன் கண்ணுக்கு காட்சியளித்தாள் அன்னை வீராயி..
அரண்டவன் சுதாரித்து வாளை எடுத்து எதிர்ப்போர் புரிய முற்பட.. அதற்கு அவகாசம் அளிக்காத வீராயி.. அவன் கழுத்தை நோக்கி வாளைச் சுழற்றி தலையை தனியாக எடுத்து விட்டாள்.
பந்து போன்று பறந்த தலை பத்தடி தூரத்தில் உருண்டு கொண்டிருந்தது..
தலையில்லா அவன் முண்டம் நர்த்தனமாடி படபடத்து துடிதுடித்து உடல் அடங்கியதைக் கண்ட வீராயி.. கோபக்கணலாய் கொதித்துக் கொண்டிருந்த முகத்தில் சிறிது வெற்றிப் புன்னகை படர்ந்திருந்தது..
வந்த வேலை வெற்றிகரமாக முடிந்தது.. தலையை எடுத்து முந்தானையில் இறுகக் கட்டியவள்... அரண்மனை பின்புறம் உள்ள மரத்தில் ஏறி மதில் சுவர் கடந்தாள். கோட்டையைக் கடந்து அடர்ந்த காட்டுக்குள் இறங்கிப் புயலென நடந்தாள்..
அவள் வேகம் கண்டு காடும் மரங்களும் ஒதுங்கி நின்று வழிவிட்டது போல் இருந்தது..
ஏதோ பிரளயம் வந்தது போல் காட்டு மிருகங்கள் பயந்து சிதறின.. பறவைகள் படபடத்தன..
காட்டைக் கடந்த வீராயிக்கு.. இடையில் பாலாறு இடைமறித்தது.. பொங்கி வந்த புது வெள்ளம் வெண்பஞ்சுகள் நுறைத்தபடி,
இரு கரைகளையும் கரைத்தபடி கூ வென்ற பெரும் சப்தத்துடன் பிரவாகித்துக் கொண்டிருந்தது...
பொழுது விடிவதற்குள் மயில்ராயன்கோட்டை நாட்டை அடைய முடியாமல் போய்விடுமோ, ஆற்றை நம்மால் கடக்க முடியாதோ என்று கலங்கி நிற்கிறாள்.. தான் கொண்ட லட்சியத்திற்கு முன் ஆற்றுவெள்ளத்தையும் துச்சமாக மதித்து ஆற்றில் குதித்து நீந்தத் தொடங்குகிறாள்.. சிறிது கடந்தவளுக்கு பெரிய அலைகள் மிகப்பெரிய சவாலாக அமைந்ததன.. ஆற்றின் வேகத்தில் அடித்துச் சென்று மயக்கமடைந்த தருவாயில்.. வீரண சாமியின் அருளால்.. வன்னி மரத்தின் ஒரு கொடி அவள் இடையைச் சுற்றி காப்பாற்றி கரை சேர்த்தது.. மயக்கம் தெளிந்து எழுந்து பார்க்கையில் உடலில் சுற்றியிருந்த வன்னி மரக்கொடி கண்டு.. உயிர் காத்த வீரணனுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறி கரையேறி #கீழநிலை எனும் ஊரை அடைகிறாள்.
அந்த எல்லையைத் தாண்டும் போது.. காவல் தெய்வங்களான வீரணண், சின்னக் கருப்பு, பெரிய கருப்பும் வீராயியை வழி மறிக்கின்றன..
செய்வதறியாது திகைத்த வீராயிக்கு வீரணண் காட்சியளித்து எல்லாவற்றையும் விளக்கி அருள் பாலிக்கிறார்.
செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றிகூறி பாதத்தில் விழுந்து வணங்கி.. தன்னோடு துணையாக வரும்படி கோருகிறாள் வீராயி..
உண்மைக்கும் நண்மைக்கும் நற்பண்பிற்கும் நீதிக்கும் தெய்வம் துணைநிற்கும் என்று கூறி காவல் தெய்வங்கள் அவளோடு துணையாக வருகின்றார்கள்.
இப்படியாக தெய்வங்கள் புடைசூழ மல்லாகோட்டை மண்ணில் அடியெடுத்து வைக்கயில் பொழுது புலர்ந்த விடியற் கருக்கலில் மயிலை எல்லையில் இருந்து வீராயி பெரும் குலவையிடுகிறாள். குலவைச் சத்தம் கேட்ட ஊர்மக்கள் அவ்விடத்தில் கூடி வீராயியின் வீராவேச வடிவத்தைக் கண்டு மெய்சிலிர்த்து குலவையிட்டு வரவேற்கிறார்கள்.
தான் கொண்டு வந்த நொண்டி மாறனின் தலையை மல்லாகோட்டை உடையவர் பெரியம்பலம் காலடியில் சமர்ப்பிக்கிறாள் வீரத்தாய் வீராயி..
"வீரம் மிக்க வரலாறு கொண்ட மயில்ராயன் கோட்டை வரலாற்றில்.. ஒரு நரித்தனமான செயலால் பலர் மாண்டனர் என்று இல்லாமல்.. அதை நிகழ்த்தியவனின் கதி யென்ன வென்று எழுதுங்கள்" என்று ஆர்ப்பரிக்கிறாள்..
தன்னோடு ஆதிமுதல் அந்தம் வரை துணையிருந்து ஒவ்வொரு செயலிலும் உதவியிருந்த வீரணணை வணங்குகிறாள் வீராயி..
"குலம் காத்த தெய்வமே, மயில்ராயன் கோட்டை நாட்டின் குலதெய்வமே.. இந்த தலைமுறை மட்டுமல்ல, இனிவரும் தலைமுறையும் வழிவழியாக உனக்கு வழிபாடு செய்து வணங்கி நிற்கும். நான் கொண்டுவந்த ஒரு தலைக்கு சாட்சியாக #எருதுகட்டு விழா எடுக்கப்பட்டு ஆடுகள் பலியிட்டு அதன் தலையை உமக்குப் படைத்து வணங்குவார்கள். என்மேல் ஆணை.. இது சத்தியம் என்று வாக்களித்து.. வீரணன் ஜோதியில் ஒளியாய் கலந்து விடுகிறாள்.
வீராயியின் வாக்கையும், சந்தியா காலத்தில் ஒளி வடிவாக காட்சி தந்ததால் வீரணண் சந்திவீரன் என்றும் வணங்கிவருகிறோம்..
ஜோதி வடிவாகிய அந்த வீராயி.. வீரஜோதியாய் நிற்பதை இன்றும் நாம் சந்திவீரன சந்நிதியில் பார்க்கிறோம்..
அந்த மாவீரத்தாயின் தியாகத்தையும் வீரத்தையும், சந்தி வீரண சாமியின் அருளையும் நினைவு கூறும் அற்புத நாளின் நிகழ்வுதான் இந்த #எருதுகட்டு என்று வரலாறின் மூலமாக அறிகிறோம்....!
மயில்ராயன்கோட்டையின் கீழவகை கிராமங்கள் ஏன் இந்த எருதுகட்டில் கலந்து கொள்வதில்லை ?!
ஒரு காலத்தில் இது மேலவகை கீழவகை கிராமங்கள் சேர்ந்து கொண்டாடப்பட்ட விழாதான்.. ஆனால் ஒரு வருடம்..
எருதுகட்டுப் பெருவிழா நாளன்று.. அதன் அங்கமாக எல்லா ஊர் எருதுகளையும் அவிழ்த்து விட்டு விரட்டுவது வழக்கத்தில் இருந்து வந்தது..
அன்று கீழவகை ஒரு கிராமத்தின் மாடுகள் வருவதற்கு தாமதமாகி விட.. தாமதமாக வந்த மாடுகள் உழவிற்கு பயன்படுத்தப்பட்டு எருதுகளைக் கழுவாமல் சுத்தப்படுத்தாமல் விட்டதால்.. எருதுகள் நரிகளாகவும், கயிறுகள் பாம்பாகவும் மாறிவிட்டதாகவும்.. இதை தெய்வக்குத்தமாக மற்ற கிராமத்தார் கருதியதால்.. அடுத்தடுத்த எருதுகட்டுகளில் கீழவகை கிராமங்கள் கலந்து கொள்ள வாய்ப்புகள் இல்லாமல் போனதாக நம்பப் படுகிறது..
மீண்டும் ஒரு முறை என் உடன்பிறப்புகளுக்கு எருது கட்டுப் பெருவிழா வாழ்த்துக்களை கூறிக்கொண்டு, விரைவிலே கீழவகை கிராமங்களும் கலந்துகொண்டாட சந்திவீரணண் வீராயி அம்மாளின் அணுக்கிரஹத்தையும் நாடுகிறேன்.
நம்பியவர்களை கைவிடாத சந்திவீரண சுவாமி உறுதியான பாதுகாப்பும் சகல சௌபாக்கியம் தரும் கடவுள் என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் இல்லை என்பதில் பெருமையடைகிறோம்..
எருது கட்டுப் பெருவிழா நெருங்கிய வேளையில் அதைப்பற்றிய இப்படி ஒரு பதிவை இடத்தூண்டியது.. அன்பு அண்ணண் மரியாதைக்குரிய மயிலை தேவேந்திரன் அம்பலம் எழுதிய மயில்ராயன் கோட்டை நாட்டு வரலாற்று புத்தகமும் மற்றும் மரியாதைக்குரிய அண்ணண் மாம்பட்டி அன்னக்கொடி கமலநாதன் Kamalanathan Annakodi அவர்களின் குரல் பதிவால் ஈர்க்கப்பட்டு இந்தப் பதிவை எழுதி வெளியிடுவதில் பெருமையடைகிறேன்.
அன்புடன்
மேலை து வெற்றிவேல் தேவன்


எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்