Friday, January 14, 2022

🌾 🌾 பொங்கலோ பொங்கல் - மலேசியாவில் மறுபடியும் !!!🌾✨


தமிழால் இணைந்த இந்த அந்நிய பூமியில்
தாய் நாட்டு பாரம்பரியத்தில்
பாதியை ஞாபகம் கொண்டு ,
மீதியை ஆசை மட்டும் கொண்டு

உறவுகளை பார்க்க இயலாமல்
மரபுகளை மறக்காமல்
அலுவலகம் அரை நாள் விடுப்பெடுத்து
பட்டித்தொழு இல்லா பட்டிணத்தில் ,
பொங்கல் மலேசியாவில் இன்று !

அருகில் இருந்த தோட்டத்தில்
தமிழ் அண்ணனிடம் செங்கரும்பு !
மாடி தோட்டத்து ரோசாப்பூ !
நண்பன் வளர்த்த மஞ்சள் கொத்து!
பூமி புத்திரனிடம் வெற்றிலையும் மற்றவையும் !

அடுப்பில் அலங்காரம்  இட்டு
அழகு மனையாள் பொங்கல் வைக்க...
மகளோ எழுவணி மடைபோல 
கொஞ்சி பேசி கோலம் போட...

தலைமகன் இறக்குமதியான 
இந்திய ஆடைகளை 
மிடுக்காய் உடுத்தி மேற்பார்வை பார்க்க !
பால்பானை பொங்கியது 
கவலைகள் எல்லாம் கரைந்தோடியது!

தடுத்தால் அடுத்த வீடு
இருந்தாலும் இலை இட்டு
படையல் பூஜை !
பூசணி இலையில் 
சூரியனுக்கும் சேர்த்து !

துள்ளி வரும் காளைகளை
தூரத்தில் இருந்து பார்த்த
காலத்தில் , என்று நாம் இளைஞன்
ஆவோம் என்ற ஏக்கம் !!!!

இளைஞன் ஆனபோது
இல்லாமலே போனது
ஜல்லிக்கட்டு நமது ஊரில் ...!!!
மீண்டது இளைஞர் மெரினா புரட்சியால் !
வரலாறு பேசும் நம் வயசானாலும் !

தாவணி பெண்களை
தை மாத திருவிழாவில்
காண்பெதெல்லாம்
கானல் நீராகவே ஆகிவிட்டது !!!

ஆடுகளும் மாடுகளும்
அங்கங்கே மட்டுமே
தென்படுகின்றன தமிழகத்தில் !!!
அசைபோட உணவும் இல்லை
ஆசையோட பழக ஆட்களும் இல்லை
அநாதையாய் ..!!!

காலங்கள் சில பல
மாற்றங்களை மனிதனில்
விதைத்தாலும் , விளையும்
பூமியெல்லாம் வளரும்
கட்டிடங்கள் கண்களுக்கு
அழகானாலும் , வயிற்றுக்கு
வருத்தமே !!!

புழுதி மணலில் புரண்டெழுந்து ,
பொழுது சாய்கையில் குழு சேர்ந்து ,
ஆலம் விழுதினில் அசைந்தாடி ,
காவிரி படுகையில் காவியம் பாடி ,
வைகையிலே வசந்தம் தேடி ,

தாமிரபரணியில் தாவிக்குதித்து ,
சிறுவாணியில் சிரித்து மகிழ்ந்து ,
வந்தோரை வாழவைத்து மகிழ்ந்த 
என் அருமை தமிழ் சொந்தங்கள் 
அனைவருக்கும் ,

மாவிலை தோரணமும் 
மஞ்சளிலே மகுடமும் 
வரவேற்க ,
சோலையிலே விளைந்த 
மெல்லிய நெல்மணிகள்
தகதக்க,

காலையிலே கறந்த 
காங்கயம் பசும்பாலோடு
ஆலையிலே வார்த்த
வெல்லம் இணைந்து ,

மண்பானை மணமனக்க
மகிழ்வு பொங்கி ..
தாவணி பெண்கள் 
மாமனை நோக்கமிடும் 
நொடிப்பொழுதினில் ..

சிறார்கள் பொங்கலோ பொங்கல் என 
ஆர்ப்பரிக்கும் இனிய இயல்புகள்!
என்றும் தொடர இறைவனை வேண்டி 

நிறைந்த மனதோடு
பொங்கி வழியும் பொங்கல் பானை போல்
அனைவரது வாழ்விலும் இன்பம் பொங்கி
இனிக்கும் கரும்பு போல்
இனியும் நம் வாழ்வு சிறக்க
உங்கள் கிராமத்து நண்பனின்
பொங்கல் நல் வாழ்த்துக்கள் !!!
நட்புடன் ,
முரசொலி க !!


2 comments:

  1. வார்த்தைகளின் வழி பொங்கல் தின அனுபவத்தைத் தந்த அண்ணனுக்கு அன்பான நன்றி.

    ReplyDelete

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்