Wednesday, October 22, 2014

தீபாவளி திருநாள் வாழ்த்து!!!


அடம் பிடித்து ஆடை வாங்கி ..
அதில் சின்ன மஞ்சள் தொட்டு ...
அதிகாலை எண்ணெய் இட்டு ...
அம்மா குளிப்பாட்டி ..
ஆயா தலை துவட்டி ...
அப்பா ஆடை இட்டு ...
சித்தி சிகை செய்து ...
அத்தை அறுசுவையை ...
மாமா ஊட்டி விட  ...
தங்கையிட்ட கோலம் தாவி .. 
தாய் மண்ணில் தோழனோடு ...
தடாலடி வெடி வெடித்து ..
இளம் கன்றாய் இருந்த ...
மங்காத நிஜங்கள் ...
மனம் முழுதும் எப்பொழுதும் ...!!!

ஐந்து நாள் பதம் செய்து ...
இந்த நாள் இனிதிட்ட அதுரசம் ...
அர்த்த ராத்திரி குழி பனியாரம் ..
அம்புட்டு அழகாய் அத்தி பூ இட்லி ..
தொட்டுக்க ஆட்டு கறி..
நாக்கு நமக்க நாட்டு கோழி ..
ஆசை தீர ஆம வடை ..
ஏப்பம் வர ஆப்பம் கொஞ்சம் .. 
பால் பணியாரம் ... பஜ்ஜி வேறு ..
பாதி உறவுக்கு .. மீதி இரவுக்கு!!! 

அளவில்லாமல் அமுக்கி விட்டு.. 
அடிவயிற்றில் சுடு சாம்பலிட்டு..
ஆயா வீட்டு திண்ணையிலே ..
அசந்து தூங்கி .. அலறி எழுந்து ..
அழகாய் முடியும் அந்த தீபாவளி !!!

அளவான அஞ்சல் அட்டையில் ...
ஆர்ப்பரிக்கும் ஓவியம் தீட்டி ..
அன்பை பரிமாறிய ..
அமைதியான நாட்கள்.. நினைவில் ...!!!

அவசர உலகத்தில் ...
ஆங்காங்கே வாழ்ந்து கொண்டு ..
நானும் உன்  உறவு என உரக்க கத்தி .. 
மகிழ்வாய் வாழ்வோம் ...
தீபாவளி திருநாளில்  என வாழ்த்தும் ...

வடவன்பட்டி வாலிபன் ..
முரசொலி க 

Tuesday, October 21, 2014

ஐந்து வருட பந்தம் இது !!!


மஞ்சளிலே நூல் தொடுக்க  ..
குங்குமமும் திலகமிட ..
மணவாளன்  துணையாக ...
மணமேடை நிறைவாக ...
சுற்றமும் படை சூழ ...
சுப முகூர்த்த தருணம் அது ...!!!
ஐந்து வருட பந்தம் இது !!!

நெஞ்சத்திலே தஞ்சமாகி ...
பஞ்சணையில் ஒருவராகி ..
இசைந்து இணைந்தாலும் ..
இரு வேறு துருவங்களாய் ...
தொடங்கிய மணவாழ்க்கை அது !!!

உனக்காக நான் மாற .. 
எனக்காக நீ மாற ...
நமக்காக "நாம்" மறக்க ...
அழகான தருணங்கள் ..
அன்பான சீண்டல்கள் -- ஆனால் 
அளவற்ற எதிர்பார்ப்புகள் ...
சுமையான ஏமாற்றங்கள் !!!

விரைவிலே விரிசல் விழ ...
வார்த்தைகளில் விஷமம் எழ ...
ஏன்டா பிறந்தோம் என ...
வேண்டா வெறுப்பாய் வாழ ...
அனேகம்பேர்  கடந்தது தான் - ஆனால் 
நமக்கு புதியது ... கணக்கு வலியது !!!

கடந்து வந்த பாதை...
கரடு முரடு தான் ..
பருவங்களில் தன் இலை துறந்து ..
பச்சையிலை துளிர்வது தானே ...
இயற்கையின்  நியதி ...!!!
நாமும் இயல்பின் பிள்ளைகள் தானே !!!

மகனின் மகிழ்வோடு ..
மனதின் துணிவோடு ...
எனது இணையோடு ...
இனிப்பான வாழ்க்கை ...
இறைவனின் ஆசியோடு !!!

ஆசைகள் குறையாது ...
மோகங்கள் தீராது ...
வம்புகள் ஓயாது ..
வரம்புகள் கிடையாது ...
அன்பு நம்மை ஆளும் வரை ...!!!

இந்நாளில் நமை பிரிந்த ...
அன்பு மாமாவின் ஆசியோடு ..
நீயாக நீயும் ... நானாக நானும் ..
நாமாக நாமும் .. 
நலமாக .. நால்வராக ..
பெற்றோரை அரவணைத்து ...
பேரின்ப குடும்பமாக ...
ஞாலம் வியக்க ...
நாளும் சிறக்க வாழ்வோம் .. !!!

திருமண நாள் வாழ்த்துக்கள்...
அன்பு மனைவிக்கு ..
அளவில்லா முத்தங்களோடு !!!

அன்புடன் ஆசையாளன் ..
முரசொலி க 
எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்